மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படும் - திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி ஸ்ரீரங்கம் வேட்பாளர் துரைராஜ் வாக்கு சேகரிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்ய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைராஜ் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்த வேட்பாளர் துரைராஜ், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களையும், திமுக அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் துரைராஜ் பேசுகையில்,...
திமுக அரசின் ஐந்தாண்டு காலம் முடிந்து மீண்டும் 2026 இல் செயல்படுத்த உள்ள திட்டங்களை கூறி மிகவும் தைரியத்தோடு உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் நல்ல பல திட்டங்களை தீட்டி மறுபடியும் தேர்தலை சந்திக்க உள்ளார்.
அடுத்த மாதம் மகளிருக்கு ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் ரூபாய் 5 லட்சம் கடன் தரப்படும். மகளிர் தாங்கள் விருப்பப்பட்ட பொருட்களை வாங்க ரூபாய் 8000 டோக்கன் வழங்கப்பட உள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்த உடன் முதன்முதலாக மகளிருக்கு டோக்கன் இல்லம் தேடி வரும்.
முதல்வருக்கு ஆதரவு தந்து ஸ்ரீரங்கம் தொகுதியில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.