திருச்சியில் ஒரு கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கொள்ளை - போலீசார் விசாரணை!

MsdMsd
Apr 25, 2026 - 21:02
திருச்சியில் ஒரு கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கொள்ளை - போலீசார் விசாரணை!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜிராம். இவரது மகன் உதய்(36). இவர் திருச்சி பெரிய கடை வீதி அடுத்துள்ள பெரிய செட்டி தெருவில் தங்க நகை மதிப்பீடு செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த நிதின்(18) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை உதயின் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத 5 மர்ம நபர்கள் கடையில் உரிமையாளரை பார்க்க வேண்டும் என்று அங்கு பணிபுரியும் நிதினிடம் கூறியுள்ளனர். அவர் மாடியில் இருக்கிறார் என்று நிதின் கூறவே, அவர்கள் 5 பேரும் மேலே சென்று கடையின் உரிமையாளர் உதயின் கை, கால்களை கட்டி கழிவறையில் அடைத்து வைத்து விட்டு, அங்கு இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், நீண்ட நேரமாக போராடிய உதய், கட்டை அவிழ்துகொண்டு கதவை உடைத்து வெளியே வந்து, கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய ஐந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.