ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் திருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா!

MsdMsd
Sep 4, 2026 - 22:26
ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் திருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா!

ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி எனப்படும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, திருச்சியில் இன்று பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விழாவில், கிருஷ்ணர் மற்றும் தேவியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு பால், தயிர், நெய், தேன், இனிப்பு நீர் மற்றும் பல்வேறு பழச்சாறுகள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. நிறைவாக மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற கிருஷ்ண பக்தர்கள், தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களை அணிவித்து அழைத்து வந்திருந்தனர். கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர், சிறுமியர்கள் விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். மேலும், பக்தர்கள் ஒன்றிணைந்து ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா என பக்தி முழக்கங்களை எழுப்பியதுடன், கிருஷ்ணரின் பெருமைகளைப் போற்றும் பக்திப் பாடல்கள், பஜனைகள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.