ஆனந்த் பாபு – ஷாதிதா நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம குடும்பம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல பிரசாத் லேப்பில், CCC Film International தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம குடும்பம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சமூகத்தில் நடைபெறும் உண்மைச் சம்பவத்தை மையக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் சைத்தன்யா சங்கரன் இயக்கியுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு கதாநாயகனாகவும், ஷாதிதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் திரைப் பிரபலங்களான மகாநதி சங்கர், முத்துக்காளை, சிசர் மனோகர், தீபக் நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் மாநிலத் தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், ‘சின்ன கவுண்டர்’, ‘எஜமான்’, ‘சிங்காரவேலன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பேரரசு, ‘திருடா திருடி’ திரைப்படத்தின் இயக்குநர் சுப்பிரமணிய சிவா, திரைப்பட விநியோகஸ்தர் ஜெனிஷ், இசையமைப்பாளர் பாலசந்திரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்ற குறும்பட நடிகரும் இயக்குநரும், மாற்றம் அமைப்பின் நிறுவனத் தலைவருமான ஆர்.ஏ. தாமஸ், இசையமைப்பாளர் யஷ்வந்த், இணை இயக்குநர் சசி, ஒளிப்பதிவாளர் ஜெரின் முகமது ராஜா, பிரின்ஸ் உள்ளிட்ட திரைப்படக் குழுவினரும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் ‘இது நம்ம குடும்பம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டன. சமூகத்தில் நடைபெறும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.