பங்குனி உத்திர விழா - வயலூர் முருகன் கோவிலில் காவடி, பால்குடம் எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்!
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக வழிபடுவது வழக்கம். நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். சிறப்புமிக்க இந்த நாளில் விரதம் இருந்து தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்நிலையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கக்கூடிய வயலூர் முருகன் கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து காவடி மற்றும் அழகு குத்தி பாதயாத்திரையாக சென்று, நீண்ட வரிசையில் நின்று அரோகரா அரோகரா என்ற கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு எந்த விதமான ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வயலூர் சாலை முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.