மேகதாது அணை கட்டியே தீருவோம் எனக் கூறும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்?” - திருச்சியில் சீமான் கேள்வி!

MsdMsd
Nov 14, 2026 - 14:50
மேகதாது அணை கட்டியே தீருவோம் எனக் கூறும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்?” - திருச்சியில் சீமான் கேள்வி!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்றும் கர்நாடக முதல்வர் கூறி வருகிறார். இதற்குத் தமிழக முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார் எனக் கேட்க வேண்டும். தமிழகத்தின் மாநில உரிமையைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, மக்களை எப்படிப் பாதுகாப்பீர்கள்? இந்த விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கும்? ‘எதையும் சொல்ல மாட்டோம், செயலில்தான் காட்டுவோம்’ என்று கூறிய தமிழக முதல்வர், இதுவரை ஏதேனும் ஒன்றைச் செய்திருந்தால் காட்டட்டும். என்னிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, ஆட்சியில் இருக்கும் ‘ஹீரோ’க்களிடம் போய்க் கேளுங்கள்; நான் ‘ஜீரோ’தான்.” “காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. கடிதம் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஒருவர் கடிதம் எழுதினார் என்றும், மற்றொருவர் எழுதவில்லை என்றும் கூறுகின்றனர். அப்படியானால் மாவட்ட ஆட்சியர் பொய் சொல்கிறாரா? மேலும், புகார் மனு கொடுக்க வரும் ஒரு குடிமகனை, துணை சபாநாயகராக இருப்பவர் எப்படி நடத்தினார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சபாநாயகர் பொறுப்புக்குத் தகுதியில்லை என்று கூறி, அவரைத் தகுதி நீக்கம் செய்யக்கூடத் தெரியவில்லையே; நீங்கள் என்ன தூய சக்தி? தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்? ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஏன் தகுதி நீக்கம் செய்ய முடியவில்லை? மீண்டும் தேர்தல் வைத்தால் வெற்றி பெற முடியாதா? அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் என்ன பெரிய ஹீரோ, என்ன மாஸ் லீடர்? மக்களைச் சந்திக்க எதற்காகப் பயப்பட வேண்டும்? வென்றால்தான் களத்தில் இருப்பீர்களா, தோற்றால் ஓடிவிடுவீர்களா? தோற்றாலும் களத்தில் நிற்பவன்தான் வீரன், அவன்தான் தலைவன். பெரும்பான்மை இல்லாமலேயே கருணாநிதி ஆட்சி செய்திருக்கிறார். அரசியலில் பெரும்பான்மை முக்கியமல்ல; நேர்மையும் உண்மையும்தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.