திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு!

MsdMsd
Sep 30, 2026 - 19:21
Sep 30, 2026 - 19:26
திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு!

உலகளவில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘பிங்க் அக்டோபர்’ மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை (SBCF) மற்றும் டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான ‘SBCF MAMMORUN 2026’ மாரத்தான் போட்டி வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு மற்றும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான டி-ஷர்ட் அறிமுக நிகழ்ச்சி, திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாரத்தான் போட்டியின் நோக்கம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர்.

21.1 கி.மீ. அரை மாரத்தான் மற்றும் 5 கி.மீ. விழிப்புணர்வு ஓட்டப்போட்டி என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. இதில் 5 கி.மீ. ஓட்டப்போட்டி போட்டியற்ற விழிப்புணர்வு ஓட்டமாக நடத்தப்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை திருச்சி மக்களிடையே ஏற்படுத்துவதுடன், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. 

21.1 கி.மீ. அரை மாரத்தான் போட்டி வரும் அக்டோபர் 4-ம் தேதி காலை 5 மணியளவில் மாம்பழச்சாலையில் உள்ள டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனையில் இருந்து தொடங்குகிறது. இந்த போட்டியை காவல் துணை ஆணையர் சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 5 கி.மீ. விழிப்புணர்வு ஓட்டப்போட்டி காலை 7 மணியளவில் தென்னூர் உழவர் சந்தையில் இருந்து தொடங்குகிறது. இந்த போட்டியை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்பதிவு இலவசமாக செய்யப்படுகிறது.

தொடர்ந்து, போட்டியின் பரிசளிப்பு விழா காலை 8.30 மணியளவில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ஏ.கே. காஜா நஷீமுதீன், செயலாளர், மற்றும் எம்.ஜே. ஜமால் முகமது, பொருளாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திரைப்பட நடிகை ப்ரீத்தா முகுந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை ரூ.3 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.