வயலூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம்: நாளை திருச்சியில் போக்குவரத்து மாற்றம்!

MsdMsd
Nov 14, 2026 - 14:51
வயலூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம்: நாளை திருச்சியில் போக்குவரத்து மாற்றம்!

திருச்சி மாவட்டம், குமாரவயலூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (நவம்பர் 15, 2026) சூரசம்ஹாரத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகவும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் நாளை காலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின் விவரங்கள்: திருச்சியிலிருந்து வயலூர் சாலை வழி: திருச்சி நகரிலிருந்து வயலூர் சாலை வழியாகச் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் அல்லித்துறை, அதவத்தூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு பின்னர் வயலூர் சாலையைச் சென்றடைய வேண்டும். சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: வயலூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு அரசுப் பேருந்துகளும் இதே அல்லித்துறை மற்றும் அதவத்தூர் மாற்றுப் பாதையிலேயே இயக்கப்படும். கரூர் மற்றும் ஜீயபுரம் வழித்தடங்கள்: கரூர், கோப்பு மற்றும் ஜீயபுரம் பகுதிகளிலிருந்து வயலூர் சாலை வழியாகத் திருச்சி நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோப்பு, குழுமணி, பேரூர் மற்றும் உறையூர் வழியாகத் திருப்பி விடப்பட்டு திருச்சி நகரத்தை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் இந்தத் தற்காலிகப் போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.