சமூகநல அமைப்புகள் சார்பில் திருச்சியில் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம்!

MsdMsd
Nov 7, 2026 - 09:39
Nov 7, 2026 - 09:41
சமூகநல அமைப்புகள் சார்பில் திருச்சியில் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம்!

தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமலும், சுற்றுச்சூழல் மாசின்றியும் பாதுகாப்பாக கொண்டாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில், பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும், திருச்சி மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய மேலாளர் செந்தில், மதுரை நகர் கிளை உதவிப் பொறியாளர் லியோ, திருச்சி மாநகரப் போக்குவரத்து உதவி பொறியாளர் அறிவழகன், பயணச்சீட்டுப் பரிசோதகர் சீனிவாசன், ஸ்ரீரங்கம் போக்குவரத்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சமூகநல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்கள், பயணிகள், நடத்துநர்கள், ஓட்டுநர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குநரும், 'மாற்றம்' அமைப்பின் நிறுவனருமான ஆர்.ஏ.தாமஸ், வழக்கறிஞர்கள் சதீஷ், ஜான் ஆறுமுகம், சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்ம்ஸ்ட்ராங், ராபி, வெங்கடேசன், முனைவர் கார்த்தி (பெட்காட் அமைப்பு), முனைவர் சங்கர் (ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு), யோகா ஆசிரியர் விஜயகுமார் (ஆளுநர் விருதாளர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை), முனைவர் மோகன்ராம் (ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத் தலைவர்), சிவசக்தி கணேசன், சி.வி. பிரகாசம் (தின சேவை அறக்கட்டளை), கார்த்தி (பகவதி வினை செய் அறக்கட்டளை), ஹெப்சி சத்தியாராகினி (தாய் நேசம் அறக்கட்டளை), யுவராணி, லக்ஷ்மி ராதாகிருஷ்ணன், பாஸ்கர், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். குடிசைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதிகள், பேருந்துகள் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது. குழந்தைகள் கட்டாயம் பெரியவர்களின் மேற்பார்வையிலேயே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் முன்னெச்சரிக்கையாகத் தண்ணீர் மற்றும் மணலை அருகில் வைத்திருக்க வேண்டும். எதிர்பாராத விதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீபாவளி என்பது வெறும் ஒளியின் திருநாள் மட்டுமல்ல; நமது மகிழ்ச்சியோடு மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நன்னாளாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நிறைவுற்றது.