திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் ஐப்பசி மாத பிறப்பையொட்டி துலாஸ்நானம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அஸ்திரதேவருடன் ஆற்றில் புனிதநீராடி வழிபாடு!

MsdMsd
Oct 18, 2026 - 17:35
Oct 19, 2026 - 17:36
திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் ஐப்பசி மாத பிறப்பையொட்டி துலாஸ்நானம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அஸ்திரதேவருடன் ஆற்றில் புனிதநீராடி வழிபாடு!

ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன, அகண்ட காவிரியில் ஐப்பசி முதல் நாளில் நடைபெறும் முழுக்கு முதல் முழுக்கு என்றும், மயிலாடுதுறையில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுழுக்கு நிகழ்வும் நடைபெறும். திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் அமைந்துள்ள தாருகாவனேசுவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல்நாள் துலாஸ்நான திருவிழா நடைபெறும். இதனையொட்டி இன்றுகாலை மூலஸ்தான சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. அதன்பின்னர் வெள்ளி ரிஷபவாகனத்தில் சோமஸ்கந்தர் அம்பாள், பசும்பொன் மயிலாம்பிகை சாமிகள் திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் வீதிஉலா வந்து அகண்ட காவிரியை வந்தடைந்தனர். அதன் பின்னர் திருக்கோவிலில் யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் காவிரி ஆற்றில் ஊற்றப்பட்டதுடன், தொடர்ந்து அஸ்திரதேவருக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீர், அரிசி மாவு, பால், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகபொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு புனிதமான காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் மற்றும் நமக்கும் நமது குடும்பத்தில் நன்மைகள் வந்துசேரும் என்பதால் அஸ்திரதேவருடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு சென்றனர்.