திருச்சி தூய வளனார் கல்லூரி விளையாட்டு விழா நிறைவு - சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய பொருளியல் துறை!
திருச்சி தூய புனித வளனார் கல்லூரியின் 183-வது விளையாட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கல்லூரியின் தேசிய மாணவர் படை (NCC), நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் அனைத்துத்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய ஐஜி பாலகிருஷ்ணன், கல்வியுடன் விளையாட்டுக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், விளையாட்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ஒழுக்கம், தலைமைப் பண்பு, குழு உணர்வு உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்க்க உதவும் என்றும் வலியுறுத்தினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சி சுங்கவரித் துறை கூடுதல் ஆணையரும், தூய புனித வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் கலந்து கொண்டார். அவர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
புள்ளிகளின் அடிப்படையில் பணிமுறை ஒன்று மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டதை பொருளியல் துறையும், பணிமுறை இரண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஸ் பட்டத்தை உடற்கல்வியியல் துறையும், மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வணிகவியல் மேதைமைத் துறை உள்ளிட்ட மூன்று துறைகள் அடங்கிய அணியும் கைப்பற்றியது.
உடற்கல்வி இயக்குனர் பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குநர் எஸ்.ரெனில்டன் பிரீஸ், முனைவர் விமல் ஜெரால்டு உள்ளிட்ட பேராசிரியர்கள் பரிசு பெற்ற மாணவர்களின் பெயர்களை வாசிக்க அருள்தந்தையர்கள், விருந்தினர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர். நிறைவாக விளையாட்டுத்துறை இயக்குநரும், துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி நன்றியுரையாற்றினார்.