திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புதிய 'ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி கேன்சர் கேர்' தொடக்கம்!

MsdMsd
Oct 27, 2026 - 20:32
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் புதிய 'ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி கேன்சர் கேர்' தொடக்கம்!

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சேவைப் பணிகளை விரிவுபடுத்தவும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் முன்னெடுப்பில் 'ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி கேன்சர் கேர்' என்ற புதிய ரோட்டரி கிளப் தொடங்கப்பட்டுள்ளது. ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சென்ட்ரல் அமைப்பின் ஆதரவோடும், வழிகாட்டுதலோடும் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கிளப்பின் சார்ட்டர் நிறுவும் விழா, திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

விழாவிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.பி.எஸ். மணி தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சென்ட்ரல் தலைவர் டாக்டர் பிரபாகரன் மற்றும் செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி கேன்சர் கேர்' அமைப்பின் தலைவராக டாக்டர் சசிப்ரியா கோவிந்தராஜ், செயலாளராக டாக்டர் சுகிர்தா, துணை தலைவராக டாக்டர் மரியா ஜினியோ மற்றும் பொருளாளராக டாக்டர் மல்லிகா ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இப்புதிய கிளப் குறித்து ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் கோவிந்தராஜ் கூறுகையில்:-

ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ அனுபவத்தையும், ரோட்டரி அமைப்பின் சமூக சேவை பணிகளையும் ஒன்றிணைத்து செயல்படுவதே இக்கிளப்பின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை பரப்புதல், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்துதல், தடுப்பு முறைகள் குறித்த கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும். மேலும், தேவையுள்ள மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் தடையின்றி கிடைக்க உதவுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளில் இக்கிளப் தீவிரமாக ஈடுபடும் என தெரிவித்தார்.

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளை சமூகத்தில் வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த புதிய ரோட்டரி கிளப் பெரும் பங்காற்றும் என எதிர்பார்ப்பாக உள்ளது.