நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை மோடி, அமித்ஷா கூட்டணி ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறது - நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க நேரு பிறந்த இந்த நல்ல நாளில் காங்கிரஸ் கட்சி உறுதியேற்கிறது - முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

MsdMsd
Nov 14, 2026 - 14:45
நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை மோடி, அமித்ஷா கூட்டணி ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறது - நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க நேரு பிறந்த இந்த நல்ல நாளில் காங்கிரஸ் கட்சி உறுதியேற்கிறது - முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள முன்னாள் பாரதப் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்த தினத்தை முன்னிட்டு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்டல மறுசீரமைப்பு தலைவரும், முன்னாள் எம்பியுமான பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்விற்கு இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சு லெனின் பிரசாத், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் பகுதி தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், வெங்கடேஷ் காந்தி, ஆறுமுகம், ஷீலா செலஸ், செந்தமிழ் செல்வன், குருமூர்த்தி, மகேந்திரன், ராஜா, எட்வின், கண்ணன், விக்னேஷ், ஜீவானந்தம், கம்பரசம்பேட்டை தர்மராஜ், சுப்புராஜ், பகுதி தலைவர்கள் ஸ்ரீரங்கம் கோபி, மலைக்கோட்டை அஞ்சு, பாலக்கரை ராஜா முகமது, காட்டூர் ராஜா டேனியல் ராய், உறையூர் கிருஷ்ணா, அணி தலைவர்கள் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் விஜய் பட்டேல்,ஐடி பிரிவு கிளமெண்ட், மாணவர் காங்கிரஸ் நரேன், ஹரிஹரன், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், அமைப்பு சாரா பிரிவு மகேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ஸ்டீபன், ரஃபிக், பாதுஷா, சரவணன், பாபு, ராஜேஸ்வரி, யோகேஷ், பாருக், ஸ்டீபன், ஹரிஹரன், தீரன் வெங்கடேஷ், ஜமால் மொய்தின், அப்துல் சலாம், பாலமுருகன், பார்வதி, சரவணன், தர்மேஷ், முரளி, செல்வராஜ், அடைக்கண், நிர்மல், அமலோற்ப மேரி, ஷண்முகம், வளன் ரோஸ், ராஜா முகமது, மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

நவ இந்தியாவைக் கட்டமைத்து, வறுமை மற்றும் கல்லாமையில் உழன்ற தேசத்தில் சாதி, மத, இனம், மொழி மற்றும் பாலின பாகுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் வாக்குரிமை என்ற மாபெரும் ஜனநாயக ஆயுதத்தை வழங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக உயர்த்தியவர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு.

நாட்டின் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக நிறுவனங்களை மோடி - அமித்ஷா கூட்டணி ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறது. ஏழை எளிய மக்களின் வாக்குகளைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கவும் நேரு பிறந்த இந்த நல்ல நாளில் காங்கிரஸ் கட்சி உறுதி ஏற்கின்றது.

பிரதமர் கலந்துகொண்ட மேடையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசியதை, பிரதமர் கண்டிக்காததுடன், பேச அனுமதித்திருப்பது தமிழக நலனுக்கு விரோதமானது. அவரைப் பேச அனுமதித்திருக்கக் கூடாது. அவர் பேசும்போது குறுக்கிட்டு இப்படி பேசுவது தவறு என பிரதமர் கூறியிருக்க வேண்டும். அப்படி சொல்லாததன் மூலமாக பிரதமர் மறைமுகமாக தமிழகத்தினுடைய நலனுக்கு விரோதமாக செயல்படுகிறார் என்பது தான் பொருள். இப்படிப்பட்ட பிரதமர் நமக்கு தேவையா என கேள்வி எழுகிறது.

எம்எல்ஏக்கள் தவறு செய்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். யாராக இருந்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணைகளை முதலமைச்சர் மேற்கொண்டு இருப்பதாக அறிகிறோம். ஆகவே நிச்சயமாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நடவடிக்கைக்கு உட்பட்டாக வேண்டும். அதுதான் ஒழுக்கம், அதுதான் நீதி.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுவிட்டதைப் போலவும், இதுவரை தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் நடக்காதது போலவும், விஜய் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இவை அனைத்தும் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்க நினைக்கின்றனர். கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை திறமையாக கையாள வேண்டும். சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குற்றங்கள் குறைந்துள்ளது. தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டதாக கலைஞர் கூறி 20 வருடங்கள் ஆகிவிட்டது. கால் நூற்றாண்டு காலமாக வளர்ந்த பிரச்சினைகளை சில மாதங்களில் முழுமையாக மாற்றியமைக்க கால அவகாசம் தேவைப்படும். தமிழகத்தில் நடைபெறும் ஒரு சில குற்ற சம்பவங்கள் அரிசியில் கிடக்கும் கல் போன்றது என்றார்.

நூலகங்களுக்குள் 75,000 போலி நூல்கள் நுழைந்தது குறித்த விவகாரத்தில், நூலகத் தேர்வு குழுத் தலைவராக இருந்த பேராசிரியர் ஜெயஞ்சன் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? தற்போது ஊழல் இல்லாத அரசாங்கத்தை முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார். 112 அரசு கல்லூரி முதல்வர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, ஒரு பெரும் தொகையை எதிர்பார்த்து கடந்த ஆட்சியில் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த ஆட்சி அமைந்த பின்னர் 112 முதல்வர்களுக்கும் அவர்கள் தகுதிக்கேற்ப நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெக ஆட்சியில் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமிப்பதிலும், கல்வி நிறுவனங்களை வரைமுறைப்படுத்துவதிலும் லஞ்சமின்றி வெளிப்படையான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, நடந்து வரும் சதியின் அத்தனை முகத்திரைகளும் கிழிக்கப்படும் என தெரிவித்தார்.