விருதுநகரில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி; திருச்சியை சேர்ந்த சேஷாத்ரி, தங்கம் வென்று தேசிய போட்டிக்குத் தேர்வு!
தமிழ்நாடு சிலம்பாட்டம் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பாக 'நண்பர்கள் சிலம்பக் கூடம்' அணியை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர் G.S.சேஷாத்ரி கலந்துகொண்டார். அவர் தனது திறம்பட விளையாடி, தனித்திறமை (சிலம்பம்) பிரிவில் தங்கப் பதக்கத்தையும், கம்பு சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ள வீரர் G.S. சேஷாத்ரியை பாராட்டி, திருச்சியில் ‘மாற்றம்’ அமைப்பின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் ஆறுமுகம், அப்துல் பாரூக், சமூகச் செயற்பாட்டாளர் ஆர்மஸ்ட்ராங், ராபி, அமிர்தம் சமூகச் சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார், தின சேவை அறக்கட்டளை தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நண்பர்கள் சிலம்பக் கூடத்தைச் சேர்ந்த சிலம்ப ஆசான்கள் சண்முகசுந்தரம், யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற நடிகரும், இயக்குநரும், மாற்றம் அமைப்பின் நிறுவனத் தலைவருமான ஆர்.ஏ. தாமஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரருக்கு தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.