முதல்வர் வருகை; திருச்சி மாநகரில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் 20-ஆம் தேதி அரசு முறைப் பயணமாகத் திருச்சிக்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 20-ஆம் தேதி காலை 9:00 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர், காலை 10:00 மணிக்குத் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து சாலை வலம் மூலம் புத்தூர் பகுதிக்கு செல்லும் அவருக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. திருச்சி புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.110 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறப்புச் சிகிச்சை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். மருத்துவமனை நிகழ்வைத் தொடர்ந்து, அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்திற்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இவ்விழாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் நேரில் வழங்குகிறார். பின்னர் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், மதியம் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சி விமான நிலையத்திலிருந்து புத்தூர் அரசு மருத்துவமனை வரை உள்ள முக்கிய சாலைகளின் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவர்களின் இருபுறமும் வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சாலைகளின் இருபுறமும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையின் முகப்பு மற்றும் சுற்றுச்சுவர்களுக்குப் புதுப்பொலிவு ஊட்டும் வகையில் வர்ணம் பூசும் பணிகளும், மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.