திருச்சியில் ரூ.25 கோடியில் புதிய குடமுருட்டி பாலம்: துரை வைகோ எம்பி நேரில் ஆய்வு!

MsdMsd
Nov 14, 2026 - 14:52
திருச்சியில் ரூ.25 கோடியில் புதிய குடமுருட்டி பாலம்: துரை வைகோ எம்பி நேரில் ஆய்வு!

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குடமுருட்டி ஆற்றின் குறுக்கே, சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பது தொடர்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

1872ஆம் ஆண்டு செங்கற்களால் கட்டப்பட்ட இப்பாலம் நூற்றாண்டைக் கடந்து மிகவும் பழுதடைந்துள்ளது என்றார். ஆங்காங்கே விரிசல்கள் மற்றும் கீறல்கள் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில், தற்போதைய 7 மீட்டர் பாலத்திற்கு அருகில் 10.5 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்படவுள்ளது. ஒரு வாரத்திற்குள் வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு 15 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய பாலம் கட்டும்போதே, பழைய பாலத்தையும் பழுதுபார்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதன் மூலம், புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் பழைய பாலத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருவழிப் பாதையாகப் பயன்படுத்த முடியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பொதுமக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.