சமுத்திக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் - பாசன விவசாயிகள் கோரிக்கை!
சமுத்தி குளத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் மனு - வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சமுத்தி குளத்தின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரி, சமுத்திகுளம் பாசன விவசாயிகள் கமிட்டி தலைவர் சங்கிலி முத்து, செயலாளர் ஆறுமுகம் மற்றும் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் மனு அளித்தனர்.
அதன் பின்னர் சமுத்திகுளம் பாசன கமிட்டி தலைவர் சங்கிலி முத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமுத்தி குளம் சுமார் 478 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாசன மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். இக்குளத்திற்கு குறுக்கே கிழக்கு - மேற்காகத் தஞ்சாவூர் ரெயில்வே பாதை செல்கிறது. இப்பாதைக்குத் தென்புறம் அமைந்துள்ள 55 ஏக்கர் நிலப்பரப்பில், கடந்த 1957 ஆம் ஆண்டிலேயே ஆதிதிராவிட மக்களுக்கு 10 ஏக்கருக்கு மட்டும் அரசு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 45 ஏக்கர் நிலம் தற்போது சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாகக் குளத்தில் தண்ணீர் முழுமையாகத் தேங்குவது தடைப்பட்டுள்ளது.இதனால் கஷ்டப்பட்டு விதை வாங்கி, நாற்று நட்டு, அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுகிறது. மீறி வரும் வெள்ளநீர் ஆக்கிரமிப்புப் பகுதியால் வழிந்து வெளியேறி, கலிங்கி உடைப்பு ஏற்பட்டு வீணாவதால், கதிர் வரும் பருவத்தில் நெல்மணிகள் வீணாகி, தங்களுக்கு பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு அளித்துள்ளோம். தற்போது மூன்றாவது முறையாக மனு அளித்துள்ளோம்.மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் மற்றும் கிராம நிர்வாக அலுவலரும் (VAO) தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், மழைக்காலம் நெருங்கிவிட்ட சூழலில், தாமதமாகும் ஒவ்வொரு நாளும் தங்களின் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்வாதாரம் உள்ளது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தின் கரைகளைப் பலப்படுத்தி, தண்ணீரை சேமிக்க வழிவகை செய்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.