விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தாஜ் நிஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் மெகராஜ் பானு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலப் பொதுச்செயலாளர் மெகராஜ் பானு கூறியதாவது:- தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2,500-க்கு வாங்கிய மளிகைப் பொருட்களை, இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.4,000 கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரிசி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பாமாயில் விலை ரூ.20-க்கு மேல் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை 116 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், இஞ்சி, பூண்டு, தக்காளி மற்றும் ஆவின் பால் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் வருமானமும் சம்பளமும் உயராத நிலையில், விலைவாசி மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமான அரிசியோ, காய்கறிகளோ வாங்கிச் சாப்பிட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, மத்திய புள்ளியியல் துறை ஆய்வின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வு இதேபோல் தொடர்ந்தால், விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என தெரிவித்தார்.