வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குபதிவு மையத்தில் வைத்து பூட்டி சீல் வைப்பு!

MsdMsd
Apr 24, 2026 - 21:04
Apr 25, 2026 - 21:05
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குபதிவு மையத்தில் வைத்து பூட்டி சீல் வைப்பு!

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 85.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியிலும், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் புலிவலம் பகுதியில் உள்ள ஓயாசிஸ் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. விவி பேட் சீட்டுகள் மற்றும் தேர்தல் ஆவணங்களும் பாதுகாப்பாக பெட்டிகளில் அடுக்கப்பட்டன. மண்டல அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட இந்த இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி மற்றும் புலிவலம் ஓயாசிஸ் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. விடிய விடிய இந்த இடமாற்ற பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரியில் ஐந்து தொகுதிகளுக்கும் தனித்தனியாக பாதுகாப்பு அறைகள் தயார் செய்யப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு அந்த இயந்திரங்களை அதிகாரிகள் சரிபார்த்து வரிசைப்படி அடுக்கி வைத்துள்ளனர். தொடர்ந்து இன்று காலை மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டது.

வரும் மே 4 ஆம் தேதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த அறைகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதுவரை அந்த பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.