மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக முதலமைச்சர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவை தமிழக முதலமைச்சர் புறக்கணித்திருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் :- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம். முன்பு தீபம் ஏற்ற விடாமல் தடுத்த திமுக அரசு இப்போது இல்லை. தற்போதைய அமைச்சர் நிர்மல் குமார் தீபம் ஏற்றுவதற்கு எதிராகப் பேசுவது கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி அளித்த பின்பும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுகின்றனர். பெண் அதிகாரி ஒருவர் குறுஞ்செய்தி மூலம் மறைமுகமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மௌனம் காத்து வருகிறார். மேலும், தமிழ்நாடு மருத்துவக் கழகம் டாஸ்மாக் பாட்டில்களை நிர்வகிக்க உள்ளதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் மனம் குளிரும்படிதான் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர, டாஸ்மாக் குளிரும்படி ஆட்சி செய்யக்கூடாது. சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியது அவர் அரசியலுக்கே தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக முதலமைச்சர் பங்கேற்ற அந்தப் புத்தக வெளியீட்டு விழாவைத் தமிழக முதலமைச்சர் புறக்கணித்திருக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை கர்நாடக முதலமைச்சரை விடத் தமிழக முதலமைச்சர்தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் நிலைப்பாடே பிரதமரின் நிலைப்பாடு என்பதால் அவர் தமிழ்நாட்டிற்கு ஒருபோதும் ஊறு விளைவிக்க மாட்டார். நதிநீர் பங்கீட்டில் பாஜக ஒருபோதும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை. கந்த சஷ்டி நிகழ்வில் முதலமைச்சரை முருகனுக்கு இணையாகப் புகழ்ந்து பாடியது தவறு. முதலமைச்சரைப் புகழ்ந்து அரோகரா எனக் கூறியது தவறு என அறநிலையத்துறை அமைச்சர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. புஷ்பவனம் குப்புசாமி பாடலில் கமா, ஃபுல் ஸ்டாப் இருக்கிறதா என இனிமேல் நாம் பார்க்க வேண்டுமா? முதலமைச்சரை சட்டசபையிலோ அல்லது வேறு இடங்களிலோ கொண்டாடிக் கொள்ளலாமே தவிர, முருகனின் கோவிலில் கொண்டாடக்கூடாது. மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என முதலமைச்சர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பதை த.வெ.க மறுபரிசீலனை செய்ய வேண்டும். காங்கிரஸ் நிச்சயமாக முதுகில் குத்தும். எஸ்.ஐ.ஆர் மூலம் கள்ள ஓட்டுகள் நீக்கப்பட்டதால்தான் விஜயால் முதலமைச்சராக முடிந்தது. த.வெ.க-வின் 6 மாத கால ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. சப்ஜெக்ட் இல்லாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க முடியும்? த.வெ.க ஆட்சியில் எல்லா சப்ஜெக்ட்டும் தவறாகத்தான் உள்ளது. துணை சபாநாயகர் போதையில் தன்னை அடித்ததாகப் பாதிக்கப்பட்டவர் கூறுகிறார். போதையை மக்களிடம் தடுத்து நிறுத்துவதற்கு முன்பாக த.வெ.க நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும். நூலகங்களில் காஞ்சிப் பெரியவர் புத்தகங்கள் வைக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது சரிதான். நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேதான் வழக்கு குறித்துப் பேசக்கூடாதே தவிர, பொதுவெளியில் கருத்துகளைப் பேச நீதிபதிகளுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. பாஜக எந்தக் கட்சியுடனும் மறைமுகக் கூட்டணியில் இல்லை. த.வெ.க-வை எதிர்ப்பது போலவே திமுகவையும் எதிர்க்கிறோம். திமுக - பாஜக கூட்டணி நிச்சயமாக இல்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும்; விசில் அடிக்கிறதோ இல்லையோ என நான் கூற மாட்டேன், ஏனென்றால் அவர்கள் எங்களுக்குப் போட்டியே கிடையாது என தெரிவித்தார்.