திருச்சியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி - சர்வதேச போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த முயற்சித்து வருவதாக தமிழ்நாடு வில்வித்தை சங்கப் பொதுச்செயலாளர் தினேஷ் பேட்டி!

MsdMsd
Oct 10, 2026 - 10:55
Oct 11, 2026 - 10:55
திருச்சியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி - சர்வதேச போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த முயற்சித்து வருவதாக தமிழ்நாடு வில்வித்தை சங்கப் பொதுச்செயலாளர் தினேஷ் பேட்டி!

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) சார்பில் 19-வது மாநில அளவிலான சீனியர் வில்வித்தைப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. திருச்சியில் முதன்முறையாக நடைபெறும் இப்போட்டியில், தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான சீனியர் பிரிவில் ரெக்கர்வ் (Recurve), காம்பவுண்ட் (Compound), மர வில் (Wooden Bow) ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை நடைபெறும் மாநிலத் தேர்வுப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரெக்கர்வ், காம்பவுண்ட் ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டு முதல் நான்கு இடங்களைப் பிடிப்பவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் நவம்பர் மாதம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இந்திய தேசிய வில்வித்தை அமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

போட்டி குறித்து தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வில்வித்தை விளையாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் முறையாக முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் வில்வித்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆறு மண்டலங்களில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய வில்வித்தை அமைப்பு உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் விளையாட்டை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சியாளர்களுக்கான பயிலரங்குகள், வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வில்வித்தையை நகர்ப்புறங்களுக்கு மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக மாவட்ட மற்றும் மண்டல அளவில் போட்டிகளை நடத்தி வருகிறோம். தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் வில்வித்தை குறித்து இதுவரை அறிந்திராத பலரும் ஆர்வத்துடன் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அடுத்ததாக வடக்கு, கிழக்கு மண்டலங்களிலும் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி, அங்கிருந்து மண்டலப் போட்டிகள், மாநிலப் போட்டிகள் வழியாக வீரர்களை தேசிய அளவுக்குக் கொண்டு செல்வதே எங்களது இலக்கு. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானங்களில் சிறிய அளவிலான இடவசதியை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம். பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகள் தேவையில்லை. சிறிய இடம் கிடைத்தால்கூட பயிற்சியாளர்களை நியமித்து, வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்க முடியும்.

பள்ளி மாணவர்களிடையே வில்வித்தை விளையாட்டை பிரபலப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையை ஊக்குவிப்பதற்காக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளிடமும் தேவையான வசதிகள், உதவிகள் குறித்து எடுத்துரைத்து வருகிறோம். வில்வித்தையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான திட்டங்களை முறையாக எடுத்துரைத்தால், அதிகாரிகளும் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளனர். 

தமிழகத்தில் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளை நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறோம். இதற்காக அடுத்த ஆண்டு தேசிய வில்வித்தை அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிற மாநில வீரர், வீராங்கனைகள் தமிழகத்துக்கு வந்து போட்டிகளில் பங்கேற்கும் சூழலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், உலக வில்வித்தை அமைப்பின் ஆதரவுடன் சர்வதேச அளவிலான போட்டி ஒன்றைத் தமிழகத்தில் நடத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வில்வித்தை விளையாட்டுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதே எங்களது நீண்டகால இலக்காகும்.

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் கடந்த 1998-ஆம் ஆண்டு மறைந்த கராத்தே மாஸ்டர் ஷியான் உசேன் அவர்களால் தொடங்கப்பட்டது. அவர் உருவாக்கிய அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, வில்வித்தையை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வில்லாளரை உருவாக்க வேண்டும் என்பதே அவர் கண்ட கனவாகும். சிறுவயதில் இயல்பாகவே வில், அம்பு போன்றவற்றின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்தை முறையான பயிற்சி மற்றும் தரமான விளையாட்டு உபகரணங்கள் மூலம் தொழில்முறை விளையாட்டாக மாற்ற வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

கடந்த ஆண்டு சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்ற பிறகு, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திருச்சியிலும் தற்போது போட்டி நடத்தப்படுகிறது. அடுத்ததாக அரியலூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வில்வித்தையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறி, சிலர் அங்கீகாரம் இல்லாத சான்றிதழ்களைப் பெற்று வைத்துள்ளனர். அவை தேசிய அல்லது மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளுக்கான சான்றிதழ்களா என்பதை வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அங்கீகரிக்கப்பட்ட வில்வித்தைப் போட்டிகள், பயிற்சி முறைகள் மற்றும் வீரர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் முறையான வழிகாட்டுதலைப் பெற்று, மாவட்ட அளவிலிருந்து மாநிலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.