2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டம்; 13 ஆண்டுகளாக பணியின்றி தவிப்பு – நியமனத் தேர்வை ரத்து செய்து பணி வழங்கக் கோரிக்கை!
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை பணி வழங்கப்படாத ஆசிரியர்கள், தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதியை “கருப்பு தினமாக” அனுசரித்து சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்கோவன் கூறியதாவது:-
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும், கடந்த 13 ஆண்டுகளாக எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் பணி நியமனத் தேர்வு எழுத வேண்டும் என 2018ஆம் ஆண்டு அரசாணை 149 பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.
இந்த அரசாணைக்கு எதிராக அனைத்து கட்சித் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுத்துள்ளனர். மதுரை, திருச்சி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் எங்களுக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் கிடைக்கவில்லை. எங்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளை 10க்கும் மேற்பட்ட முறை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம் கையெழுத்துகளைப் பெற்று, நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்களைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பை இழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்து, நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நியமனத் தேர்வை ரத்து செய்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார்.
மேலும், தமிழக முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவிக்க பலமுறை முயற்சி செய்தும், அதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, எங்களது 13 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனிக்கவனம் செலுத்தி, எங்களை அழைத்துப் பேசி, விரைவில் நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும்.
இதுவரை எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காததால், நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களையும், சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தையும் விரைவில் நடத்துவோம் என்றார்.
13 ஆண்டுகளாக பணி நியமனத்திற்காக காத்திருக்கும் தங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் தலையிட்டு, நியமனத் தேர்வை ரத்து செய்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பதே இன்றைய ஆசிரியர் தினத்தில் சங்க உறுப்பினர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.