மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூtடாது; இல்லையென்றால் இந்தியாவில் தமிழகத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் - விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி!

MsdMsd
Oct 5, 2026 - 15:09
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூtடாது; இல்லையென்றால் இந்தியாவில் தமிழகத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் - விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-

உச்ச நீதிமன்றம் மாதம் மாதம் தமிழகத்திற்கு குறிப்பிட்ட தண்ணீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அதனை கேட்க மறுக்கிறது. இதன் மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது, காவிரி - கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும், கோதாவரி - காவிரியை இணைக்க வேண்டும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும். தனி தமிழ்நாடாக மாறுவதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக, இடைத்தேர்தல் பணிகள் இருப்பதால், சில நாட்களில் கோரிக்கை நிறைவேற்றுகிறோம் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே அதற்கு பின்னர் முடிவெடுப்போம். எங்களது கோரிக்கைகள் குறித்து வரும் 12ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம், காவல்துறை அனுமதி அளித்தால் நேரில் சந்தித்து மனு அளிப்போம். தமிழகத்தில் திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது சாகுபடி செய்யப்படாமல் உள்ளது. எனவே தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.