திருச்சியில் IPL FAN PARK - 2 நாட்கள் மெகா திரையில் போட்டி ஒளிபரப்பு!
திருச்சியில் ஐபிஎல் ஃபேன் பார்க் நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்து பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா, முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர், திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில்:-
கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண முடியாத ரசிகர்களின் ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஐபிஎல் பேன் பார்க் சார்பில் இந்தியா முழுவதும் 50 நகரங்களில் பிரம்மாண்டமான திரைகளில் நேரடியாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பி ரசிகர்களுக்கு ஸ்டேடியத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா திரையில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி நாளை (மே.2) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போட்டி மற்றும் நாளை மறுதினம் (மே.3) மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் சன் ரைஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி, நாளை மாலை 6:30 மணிக்கு நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும், திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மெகா திரையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதியம் 2:30 மணி அளவில் இருந்து நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் காணலாம். இந்த கிரிக்கெட் போட்டியை சுமார் 10,000 ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.