துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கிய விவகாரம்; பாதிக்கப்பட்ட நபர் விசாரணைக்காக எஸ்பி அலுவலகத்தில் ஆஜர்!

MsdMsd
Nov 16, 2026 - 16:53
துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கிய விவகாரம்; பாதிக்கப்பட்ட நபர் விசாரணைக்காக எஸ்பி அலுவலகத்தில் ஆஜர்!

திருச்சி மண்ணச்சநல்லூரில் துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகப் புகாரளித்த துறையூரைச் சேர்ந்த கார்த்திக் குமார், காவல்துறையின் அழைப்பாணையை ஏற்று இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெசவாளர் காலனி, மலையப்பன் சாலையை சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவர் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி, மண்ணச்சநல்லூரி வசித்து வரும் துணை சபாநாயகர் ரவிசங்கரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது துணை சபாநாயகர் ரவி சங்கர், கார்த்திகுமாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்குவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அரசு பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா எனப் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்ததோடு, துணை சபாநாயகரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும், அவர் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த கார்த்திக் குமார், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முன்னதாக, இச்சம்பவம் குறித்து கார்த்திக் குமார் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி காவல்துறையில் புகார் மனு அளித்திருந்தார். இப்புகார் மனு தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறி, திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நவம்பர் 14-ஆம் தேதி கார்த்திக் குமாரின் வீட்டில் நேரில் அழைப்பாணை வழங்கப்பட்டது. அதில், நவம்பர் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணை அதிகாரியின் முன்பு நேரில் ஆஜராகி, தங்களது தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கார்த்திக் குமார் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணைப் பணிக்காக வெளியில் சென்றிருப்பதால், காத்திருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கார்த்திக் குமார் கூறியதாவது:-

நான் மது அருந்துபவன் கிடையாது. சம்பவத்தன்று துறையூரிலிருந்து சமயபுரம் கோயில் உள்ளிட்ட ஐந்து கோயில்களுக்குச் செல்வதற்காகவே வந்தேன். சண்டிகருப்பு சாமிக்காக படைப்பதற்காக வாங்கிய மதுபானத்தை எனது இருசக்கர வாகனத்தின் டேங்க் பகுதியில் வைத்திருந்தேன். வழியில் துணை சபாநாயகரிடம் ஒரு நிமிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் செல்லலாம் என்றுதான் சென்றேன். ஆனால், மதுபோதையில் வந்த துணை சபாநாயகர், எனது கோரிக்கையைக் கூடக் கேட்காமல் என்னைச் சரமாரியாகத் தாக்கினார். எனது இருசக்கர வாகனத்தைப் பறித்து வைத்துக் கொண்டதோடு, கழுத்திலிருந்த செயின், செருப்பு, கண்ணாடி என அனைத்தும் பறிபோன நிலையில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பியோடினேன். ஓடும்போதே 100 மற்றும் 108 அவசர எண்களுக்குத் தகவல் தெரிவித்தேன். சம்பவ இடத்திற்கு வந்த 100 காவலர், என்னை விசாரித்துவிட்டு துணை சபாநாயகர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாததால், சாலையில் சென்றவர்களின் உதவியோடு மருத்துவமனைக்குச் சென்றேன். சாமிக்காக நான் வாங்கிய மதுவை யார் குடித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த சண்டிகருப்பு நிச்சயம் தண்டனை கொடுக்கும். முன்னாள் அமைச்சர் நேருவுடன் நான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, திமுகவின் தூண்டுதலின் பேரில் நான் புகாரளிப்பதாகக் கூறுவது தவறானது. நான் மாவட்டப் புகைப்படக் கலைஞராக உள்ளேன். துறையூர் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவின்போது, அரசுத் தரப்பு அழைப்பின் பேரில் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தேன். அப்போது எதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அரசியல் சாயம் பூசுகிறார்கள். நான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இருக்கிறேன். இவ்விவகாரம் கட்சித் தலைமையின் கவனத்திற்குச் சென்றுள்ளதா எனத் தெரியவில்லை; தலைவர் நிச்சயம் நல்ல நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். கார் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டவுடனேயே எனது பாதுகாப்பிற்காக செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினேன். அந்த வீடியோவில் நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை; வந்த வேகத்திலேயே துணை சபாநாயகர் என்னைத் தாக்கினார். நான் மதுபோதையில் வந்து வீட்டுக் கண்ணாடியை உடைத்தேன் என்றும், ஆபாசமாகப் பேசினேன் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி நான் செய்திருந்தால், அப்போதே என் மீது வழக்குப் பதிவு செய்திருக்கலாமே? ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நிமிடங்களிலேயே அங்கு வந்த காவல் ஆய்வாளர் கிருபாநிதி, என்னைக் காவல்துறை ஜீப்பில் அழைத்துச் சென்று மிரட்டி வீடியோ எடுத்தார். அடிவாங்கிய வலியில் நான் பேசிக்கொண்டிருக்க, துணை சபாநாயகர் எனது அருகில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார். துணை சபாநாயகர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை முயற்சி தாக்குதல் நடத்தியுள்ளார். என்னைத் தாக்கும்போது, அங்கிருந்த அவரது மகன் கட்டையை எடுத்துக் கொடுத்துள்ளார். எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, துணை சபாநாயகர், அவரது மகன் மற்றும் என்னை மிரட்டி வீடியோ எடுத்த காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.