ராகுல் காந்தி கூறுவது உண்மைதான்; பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என திருச்சியில் துரை வைகோ எம்பி பேட்டி!

MsdMsd
May 20, 2026 - 19:45
ராகுல் காந்தி கூறுவது உண்மைதான்; பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என திருச்சியில் துரை வைகோ எம்பி பேட்டி!

திருச்சி எம்பி துரை வைகோ இன்று தென்னூர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...

திருச்சி மாநகரப் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நேற்று ஆய்வு செய்துள்ளேன். மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் ஆகஸ்டில் முடியும் என தெரிவித்தனர். ஆனால் தற்போது பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்.

அரிஸ்டோ மேம்பால பணிகள் ஜூன் மாதம் நிறைவடையும் என தெரிவித்திருந்தனர். அந்தப் பணிகளும் வரும் டிசம்பர் மாதம் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர். மேலும் காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடித்து, பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தியுள்ளேன்.

திருச்சி - திருப்பதிக்கு பகல் நேர ரயில் சேவை வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சகத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் திருப்பதி - குண்டூர் வரையிலான ரயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி சர்வதேச விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளது. விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக ₹.350 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி எப்போது கிடைக்கும் என எந்த பதிலும் இன்னும் வரவில்லை. ஒன்றிய அரசும், இந்திய விமான அமைச்சகமும் மேற்குறிப்பிட்ட நிதியை விரைந்து வழங்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி வரலாம் என ராகுல் காந்தி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?

மேற்காசிய பகுதிகளில் நடக்கும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நான்காவது முறையாக தற்போது விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளது. காய்கறி விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் பொழுது, பணவீக்கம் ஏற்படும். இந்த பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டும். சகோதரர் ராகுல் காந்தி கூறியது உண்மையான கருத்து. இப்படியே போனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலையும் ஏற்படலாம் என தெரிவித்தார்.

கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது; கூட்டணி இல்லாமல் ஜெயிக்கலாம் என கனிமொழி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?

இது அவரது தனிப்பட்ட கருத்து. மதிமுகவை பொருத்தவரை எங்கள் இயக்கத்தை வலுப்படுத்தியுள்ளோம். வரும் காலங்களில் கூட்டணி பலம் இல்லாமல் திமுக வெற்றி பெறகூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதே கருத்தை நாங்களும் கூறலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பால் பண்ணை - துவாக்குடி சர்விஸ் சாலையை பொறுத்தவரை கடந்த அரசும் மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்கள். பல விபத்துக்கள் நேரிட்டுள்ளது. பல உயிர்கள் இழந்துள்ள நிலையில் இனியும் காலதாமதம் நேரக்கூடாது. காலதாமதம் செய்யாமல் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சர்விஸ் சாலையை உடனடியாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

திருச்சி - தஞ்சை சாலையில் காலாவதியான டோல் பிளாசாவில் டோல் கட்டணம் வசூலிப்பது மற்றும் சுங்க சாவடியை குறைக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துதுறை அமைச்சரிடம் வலியுறுத்துவோம். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பசுமைவழி சாலை விரைந்து அமைக்க ஒப்பந்ததாரிடம் வலியுறுத்தப்படும், நானே இந்த சாலையில் செல்ல அச்சப்படுவேன்.

ஜி கார்னர் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்ற 15 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது, தேர்தல் நேரம் என்பதால் டெண்டர் விடப்பட்டுள்ளது, இரண்டு வாரத்தில் முடிந்துவிடும் என்றார்கள். இதுதொடர்பாக அமைச்சகத்திடம் தொடர்ந்து பாலோ செய்து வருவதாகவும் தெரிவித்தார்.