முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகளுக்கான பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்!
தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுயில் கூறியபடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு, மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,:-
தமிழக வெற்றி கழக தலைவரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் முதுகெலும்பைக் காப்பேன் என்று கூறினார். 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 100% பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது வெளியிட்டுள்ள அரசாணை விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் உள்ளது.
இந்த தள்ளுபடிப் பட்டியலை யார் தயாரித்தது என்று தெரியவில்லை. ₹50,000 கடன் வாங்கியவர்களுக்கு ₹5,000 மட்டுமே தள்ளுபடி, ₹60,000 கடன் வாங்கியவர்களுக்கு ₹40,000 தள்ளுபடி, ₹70,000 கடன் வாங்கியவர்களுக்கு ₹30,000 தள்ளுபடி, ₹80,000 கடன் வாங்கியவர்களுக்கு ₹20,000 தள்ளுபடி, ₹1 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியவர்களுக்கு வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படியொரு நிபந்தனையை விதித்து அரசாங்கம் எங்களுக்கு பிச்சை போடுகிறதா?
முந்தைய திமுக ஆட்சியில் ₹9,000 கோடியும், கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ₹12,000 கோடியும் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்தனர். புதிய ஆட்சியில் மாற்றம் வரும் என்று நம்பிய விவசாயிகளின் வயிற்றில் இந்த அரசு அடித்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு ₹1,350-க்கு விற்ற உரங்கள் (ஆனை மார்க், பேக்டம்பாஸ் போன்றவை) தற்போது ₹2,150 ஆக உயர்ந்துவிட்டன. யூரியா போன்ற உரங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பூச்சி மருந்துகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய போக்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்து வருகிறது.
கந்துவட்டிக் கொடுமையால் விவசாயிகள் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்குக் கூலி வேலை தேடி இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய், தனது 2026 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, எவ்வித நிபந்தனையுமின்றி 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு 100 விழுக்காடும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 விழுக்காடும் பயிர்க்கடனை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளைத் தெருவில் பிச்சை எடுக்க வைக்காமல், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார். பேட்டி: பூ.விசுவநாதன், மாநில தலைவர், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்.