மாநில அளவிலான எர்த் மூவர்ஸ் ஆலோசனை கூட்டம் - நலிவடைந்த இத்தொழிலை மீட்க முதல்வருக்கு கோரிக்கை!

MsdMsd
Jun 2, 2026 - 10:00
Jun 5, 2026 - 10:00
மாநில அளவிலான எர்த் மூவர்ஸ் ஆலோசனை கூட்டம் - நலிவடைந்த இத்தொழிலை மீட்க முதல்வருக்கு கோரிக்கை!

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நலிவடைந்து வரும் தங்களது தொழிலைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மீட்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில்:-- டீசல், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் விலை உயர்வால் இத்தொழில் தற்போது முற்றிலும் நலிவடைந்துவிட்டது. அரசியல்வாதிகளுக்கு சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் வழங்கப்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் ஏரி, குளங்களைத் தூர்வாருவதற்கு 40% வரை கமிஷன் கைமாறுவதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, அந்தப் பணிகளை எங்களிடம் ஒப்படைத்தால், எவ்வித கமிஷனும் இல்லாமல் முழுமையாக, உரிய முறையில் தூர்வாரித் தரத் தயாராக இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹.1,500 என்ற வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையே அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் முதலமைச்சராக விஜயை அமர்த்தி மாற்றத்தைத் தந்துள்ளோம். முதல்வர் விஜய் நலிவடைந்த எங்களது தொழிலை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது இந்த நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்க உள்ளோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், தமிழகம் தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். பேட்டி: 1) சந்திரசேகரன், தலைவர், கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம். பேட்டி: 2) மஞ்சுநாதன், தலைவர், திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம்.