2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் - இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

MsdMsd
Aug 9, 2026 - 17:03
Aug 9, 2026 - 17:03
2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் - இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கலந்தாய்வு கூட்டம், மாநில தலைவர் பார்த்திபன் தலைமையில், மாநில செயலாளர் விஷ்ணு பிரியா முன்னிலையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மணி, துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோகைமலை வட்டார செயலாளர் மணிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களை கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். கடந்த 14 ஆண்டுகளில் பலமுறை தகுதி தேர்வு எழுதியும், ஆயிரக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றும் அரசாணை 149 மூலம் தமிழ் தகுதி தேர்வோடு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தகுதியுள்ள 21,515 ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள 30,000 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் முதலமைச்சர் அவர்களின் 110 விதியின் கீழ் புதிய அரசாணை பிறப்பித்து பணி நியமனம் வழங்கிட வேண்டும்.

தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தி, மேலும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதமும் மற்றும் காலிப்பணியிடங்களை கருத்தில் கொண்டும் டிஆர்பி தேர்வாணையம் தொடக்கப்பள்ளிக்கு வைத்த அனைத்து தேர்வுகளிலும் தகுதியை நிரூபித்துள்ள 21,515 ஆசிரியர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிரந்தர பணி நியமனம் வழங்கிட வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் 1 நிரந்தர ஆசிரியர் என ஒரு பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும், கடந்த 2013 முதல் 2026 வரை ஒரு முறை மட்டுமே குறைந்த அளவில் ஆசிரியர் எண்ணிக்கை நியமனம் நடைபெற்ற நிலையில் கல்வித்தந்தை காமராஜர் கொள்கை வழியில் ஆட்சி புரியும் முதல்வர் விஜய் தகுதியுள்ள 21,515 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:--

2024-ஆம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 21,515 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், கூடுதல் தேர்வுகள் எதையும் நடத்தாமல், ஏற்கனவே தகுதித் தேர்வு மற்றும் தமிழ் தகுதித் தேர்வுகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஒற்றை ஆசிரியர் மற்றும் ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்புவதுடன், அனைத்துத் தேர்வுகளிலும் தனது தகுதியை நிரூபித்துள்ள ஆசிரியர்களுக்குப் பணி வழங்குவதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளதை ஏற்று, பரிசீலனையில் உள்ள கோரிக்கைகள் மீது உரிய அரசாணை வெளியிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிதிநிலை மற்றும் கோரிக்கைகள் தொடர்பான பரிசீலனை குறித்து வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் மானிய கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.