முதல்வர் வருகை - திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்குச் செல்லும் அவர், அரசு விழாவை நிறைவு செய்துவிட்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை ஒருநாள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், திருச்சி விமான நிலையம் மற்றும் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலை முழுவதும் திருச்சி மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.