ஆதவ் அர்ஜுனா கார் மோதி காவலர் கால் முறிவு!

MsdMsd
Apr 2, 2026 - 22:53
ஆதவ் அர்ஜுனா கார் மோதி காவலர் கால் முறிவு!

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக  சென்னையிலிருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பிறகு மரக்கடை பகுதியில் தனது தேர்தல் பிரச்சார பரப்புரையை மேற்கொண்டார். சுமாராக 20 நிமிடத்திற்கு மேலாக தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

விஜயின் கார் புறப்பட்ட பிறகு அங்கு குவிந்திருந்த தவெகவினர், காவல்துறையினர் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பேரிக்காடுகளை உடைத்துக் கொண்டு விஜய் காரை நோக்கி சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது தவெக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா கார் மோதியது. இதில் காவலர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டவுடன் கூட்டத்திலிருந்து நிர்வாகிகள் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.