தேர்தல் திருவிழா - 2026; தேசிய ஜனநாயக கூட்டணி லால்குடி தொகுதி வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல்!

MsdMsd
Apr 6, 2026 - 15:01
Apr 6, 2026 - 15:05
தேர்தல் திருவிழா - 2026; தேசிய ஜனநாயக கூட்டணி லால்குடி தொகுதி வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், சின்னம்மா சசிகலா தொடங்கிய அனைதிந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். லால்குடி துணை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஶ்ரீதரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக லால்குடி ரவுண்டானா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புடை சூழ, மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்எல்ஏ பாலன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.