திருச்சி வளர்ச்சிக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கே.என்.நேருவை வெற்றி பெறச் செய்யுங்கள் - துரை வைகோ எம்பி வேண்டுகோள்!

MsdMsd
Apr 13, 2026 - 21:57
திருச்சி வளர்ச்சிக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கே.என்.நேருவை வெற்றி பெறச் செய்யுங்கள் - துரை வைகோ எம்பி வேண்டுகோள்!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, இன்று புத்தூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்:-- ​ ​

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொண்டு வந்த திட்டங்கள் பல. ​தற்போது வழங்கப்பட்டு வரும் ₹.1000 ஊக்கத்தொகை, இனி ₹2000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ₹1000 ஊக்கத்தொகை, இனி ₹1500 ஆக உயர்த்தப்படும். ​இல்லம் தேடி வரும் மருத்துவச் சேவைகள் மூலம் பல லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. ​

தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியால் கடந்த 5 ஆண்டுகளில் ₹12.36 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஒன்றிய அரசின் EPFO புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்துகின்றன. ​

அமைச்சர் கே.என்.நேரு இந்தத் தொகுதிக்காக பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். ₹300 கோடி மதிப்பில் சென்னைக்கு நிகரான பேருந்து நிலையம் மற்றும் ₹140 கோடியில் லாரி முனையம். ₹415 கோடியில் டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொன்னகர் - ராம்ஜி நகர் சாலை விரிவாக்கம், கோரையாற்றின் குறுக்கே ₹26 கோடியில் பாலம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் ₹110 கோடியில் நவீன மருத்துவப் பிரிவு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சிக்கு மெட்ரோ ரயில் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. ஆனால், மக்கள் தொகை குறைவாக உள்ள வட மாநில நகரங்களுக்கு மெட்ரோ வழங்கப்படுகிறது. மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் காகித அளவிலேயே உள்ளது. இத்தகைய சூழலில் திமுக அரசு தொடர வேண்டும். ​

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க 8 ஏக்கர் ரயில்வே நிலம் பெறப்பட்டு, ₹95 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ​12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக 100% நிலம் கையகப்படுத்தப்பட்டு, ₹350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ​

ஜனநாயகம், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை வெற்றி பெறவும், திருச்சி மாவட்டம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும், ஆற்றல்மிக்க வேட்பாளர் அண்ணன் கே.என்.நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.