போலி இ-சேவை மைய பயிற்சி வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டமும், உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமும் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு செயலாளர் சேவியர் முன்னிலை வகித்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில்:-
தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அரசு அறிவித்துள்ள அனைத்து நெறிமுறைகளுக்கும் உட்பட்டுச் சீரான முறையில் இ-சேவை மையங்களை நடத்தி வருகின்றனர்.
CSC எனப்படும் 'டிஜிட்டல் சேவா' தளத்தில் இ-சேவை வழங்குவதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், 1,000-க்கும் மேற்பட்டோரின் இ-சேவை ஐடி (ID) செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு மீண்டும் இ-சேவைகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக இ-சேவை மையங்களுக்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போதைய விலைவாசி உயர்வு, கட்டட வாடகை மற்றும் பணியாளர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இ-சேவை கட்டணங்களை தமிழக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும். மேலும், இ-சேவை மையங்களுக்குக் குறைந்தபட்ச மின் கட்டண மானியம் வழங்க வேண்டும்.
இ-சேவை மைய உரிமையாளர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தனியாக நலவாரியம் அமைத்துத் தர வேண்டும். குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்றுதல், பெயர் திருத்தம் செய்தல் மற்றும் ஸ்மார்ட் கார்டு அச்சிடுதல் போன்ற சேவைகளை இ-சேவை மையங்கள் மூலமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
பிறப்பு சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப வசதியை வழங்க வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதாரில் பெயர் திருத்தம், விவரங்கள் திருத்தம் மற்றும் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகளுக்கு வழங்க அனுமதி அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சேவைகளையும் முழுமையாக ஆன்லைன் மயமாக்கி, இ-சேவை மையங்கள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணையதளங்களில் ரூ.6,000 மற்றும் ரூ.10,000 கட்டணத்தில் புதிய இ-சேவை மைய பயிற்சி என்ற பெயரில் போலி நபர்கள், அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலி கும்பலால் அரசு அங்கீகரித்த இ-சேவை மைய ஐடி-க்களை வழங்க முடியாது. இதுகுறித்து ஏற்கனவே அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய போலி மையங்களைக் கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இ-சேவை மையங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.