தமிழ்நாட்டு மக்களின் டெல்லி பிரதிநிதியாக நான் என்றும் இருப்பேன் - துறையூர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

MsdMsd
Apr 18, 2026 - 22:17
தமிழ்நாட்டு மக்களின் டெல்லி பிரதிநிதியாக நான் என்றும் இருப்பேன் - துறையூர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டவர் சென்னை விமான நிலையம் வருகை தந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சோழிங்கர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த ராகுல் காந்தி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூர் பகுதிக்கு வருகை தந்தார். துறையூர் ஜமீன்தார் பள்ளியில் போடப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் துறையூர் பிரிவு ரோடு பகுதிக்கு வருகை தந்தார்.

அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் துறையூரில் போட்டியிடும் வேட்பாளர் லெனின் பிரசாத்தையும் திருச்சி மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர் தங்க பாலு, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:--

தமிழ்நாட்டில் நடைபெற இருப்பது வழக்கமான தேர்தல் இல்லை. முற்றிலும் வேறு பட்ட தேர்தல். பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது என தெரிந்து அதிமுக என்ற போர்வையை அணிந்து கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்க்கிறது பாஜக. அதிமுக முன்பு சிறப்பான கட்சியாக இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. அதிமுகவின் பொம்மை வேட்பாளரை முதல்வராக அறிவித்து தமிழ்நாட்டிற்குள் முகமூடி அணிந்து நுழைய பார்க்கிறது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ். பாஜக தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, வாழ்வியலை சிதைக்க பார்க்கிறது. தமிழ் மொழி சாதாரணமான மொழி அல்ல. தமிழர்கள் அறிவாளிகள். அறிவாளிகளை பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்சிற்கும் பிடிக்கவில்லை. எனவே தமிழ்நாட்டில் அதிமுக என்ற முகமூடியை அணிந்து நுழைய பார்க்கிறது பாஜக. அதிமுகவினர் செய்த ஊழல்களை மறைக்கவே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகின்றனர். சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அரசின் முகமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது பாஜக. ஆனால் இதற்கெல்லாம் தமிழ்நாடு முதல்வரும் எனது அருமை சகோதரருமான ஸ்டாலின் பயப்பட மாட்டார். திமுகவின் கொள்கைகளையும், தமிழ்நாட்டின் கொள்கைகளையும் என்றும் அவர் கைவிடமாட்டார். அவரது தலைமையில் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறு வரையறை சட்டத்தை நுழைக்க முயற்சித்தது பாஜக. பாஜகவினர் எப்போதும் தங்களுக்கு ஏதுவாகவே அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிக் கொள்ள பார்க்கின்றனர். ஆனால் கூட்டணி கட்சிகள் ஒன்றாக நின்று அந்த சதி திட்டத்தை முறியடித்து விட்டோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயன்ற பாஜகவின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. நேற்று பிரதமர் மோடியின் முகத்தை மக்கள் நாடாளுமன்றத்தில் பார்த்திருப்பார்கள். தோல்வியின் பிரதிவழிப்பாக பிரதமர் மோடியின் முகம் நேற்று இருந்தது. பாஜக மக்கள் மத்தியில் மத, இன, மொழி, கலாச்சார வேறுபாடுகளை திணித்து மக்களின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என சிறுபான்மையினர்களை பிரித்து ஆதாயம் தேட நினைக்கிறது. முழுமையாக இரண்டு தனியார் நிறுவனங்களை மட்டும் நம்பி பாஜக செயல்படுகிறது. அவர்களுக்காக நாட்டின் வளர்ச்சியே சமரசம் செய்ய தயாராகிவிட்டார் பிரதமர் மோடி. இப்போது தமிழ்நாட்டில் நிலைக்கும் சமூக நீதி அவர்களுக்கு பிடிக்கவில்லை. பட்டியலின மக்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாடு தான் சமூக நீதி, மகளிர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுதாரணமாக மற்ற மாவட்டங்களுக்கு திகழ்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைக்கூலியாக மாறிவிட்டார். பிரதமர் மோடி அவர் கூறுவதை அப்படியே செய்ய பிரதமர் மோடி தயார். அவர் குதி என்று சொன்னாலும் குதிக்க செய்வார் பிரதமர். இப்போது மோடி அமெரிக்காவின் பிரதிநிதியாக இந்தியாவில் உள்ளார். நமது நாட்டின் விவசாயிகளை, தொழிலாளர்களை, தரவுகளை, சிறு குறு தொழில்களை அமெரிக்கா நாட்டிடம் விற்று விட்டார் பிரதமர் மோடி. அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சொல்வதை எல்லாம் கேட்கும் முதல்வரை தேடிக்கொண்டிருக்கிறார். அதற்கு சரியாக இப்போது அதிமுக உள்ளது. இப்போது நான் கூறுகிறேன் தமிழ்நாட்டிற்குள் பாஜகவாலும் ஆர்எஸ்எஸ்சாலும் நுழைய முடியாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதை அனுமதிக்காது. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் இருக்கும் பந்தம் மக்களாகிய உங்களுக்கு தெரியும். எனது தாத்தா தந்தை தாயார் தொட்டு இன்று நான் தமிழக மக்களுடன் நிற்கிறேன். தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் பாசம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவை. தமிழ்நாட்டு மக்களின் டெல்லி பிரதிநிதியாக நான் என்றும் இருப்பேன். குறிப்பாக சொன்னால் தமிழ்நாட்டு மக்களின் ராணுவ வீரனாக டெல்லியில் நான் இருப்பேன். தமிழ்நாடு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நான் போராடுவேன். தமிழ்நாடு மக்களை பார்க்க எனக்கு பெருமையாக உள்ளது. இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸை பாஜகவை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அகற்றும். மக்களாகிய நீங்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைப் போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சிறப்பான ஒத்துழைப்பை நாம் கொடுக்க வேண்டும் என பேசினார்.