வாக்குகளை பிரிப்பதற்காகவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார் - திருமாவளவன் கடும் தாக்கு!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,... திமுக ஆட்சி தொடர வேண்டும். முதலமைச்சரின் புரட்சிகரமான திட்டங்கள் தொடர வேண்டும். மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்குதல், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதிய திட்டங்களை, புரட்சிகர திட்டங்களை, பெண்களை வலிமைப்படுத்துகிற திட்டங்களை வரையறுத்து வெற்றிகரமாக சாதித்து இருக்கிற நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். அவரது ஆட்சி தொடருவதற்கு திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை வெற்றி பெற செய்ய வேண்டும். பாஜக என்ற கட்சியை தோளிலே சுமந்து வருகிற அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். கிறிஸ்தவ நிறுவனங்கள், அயல்நாடுகளில் உதவி பெற்று வந்த நிறுவனங்கள் அனைத்தையும் இன்று முடக்கி வைத்துள்ள அரசு பாஜக அரசு. கிறிஸ்தவர்களை வெறுக்கும் கட்சி பாஜக. பாஜகவிற்கு மறைமுகமாக துணை போகிறவர் தான் விஜய். ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்காக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற போராட்டங்களில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றுள்ளது. ஆனால் இது குறித்து என்றைக்காவது விஜய்யும், எடப்பாடி பழனிசாமியும் பேசி உள்ளார்களா. தலித் கிறிஸ்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். ஜோசப் விஜய் எந்த அடையாளமும் இல்லாமல் சினிமாவை வைத்து வாக்குகளை பிரிக்க முயற்சிக்கிறார். அவர் ஒரு நாள் கூட இந்த எஃப்சிஆர்ஏ சட்டத்தை கொண்டு வந்த பாஜகவை எதிர்த்தது இல்லை. இஸ்லாமிய கிறித்தவ வாக்குகளை திட்டமிட்டு பிரிப்பதற்காக, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக கட்சியை தொடங்கியவர் விஜய். விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது அவருக்கு தெரியும். அவர் போட்டியிடக் கூடிய பெரம்பூரில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கு தெரியும், அதனால்தான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இரட்டை இலைக்கு வாக்களித்தாலும், விசில் சின்னத்திற்கு வாக்களித்தாலும் அது மோடியைத் தான் போய் சேரும். எனவே பொதுமக்கள் வாக்குகளை வீணாக்காமல், விரயம் செய்யாமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இனிகோ இருதயராஜை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.