திருச்சி நாய்கள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் மாயம்? ஊழியர்கள் திறந்துவிட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு!
திருச்சி மாநகராட்சி சார்பில் உறையூர் கோணக்கரை பகுதியில் நாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகையன்று அடைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நாய்களை, பணிபுரியும் ஊழியர்கள் கூண்டுகளைத் திறந்து வெளியேற்றிவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து திருச்சி விலங்கு நல ஆர்வலர் அஜய் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிடித்து வந்து காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள், தீபாவளி சமயத்தில் கூண்டுகள் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் வழக்கமாக அந்த நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வந்த பொதுமக்களும், விலங்கு நல ஆர்வலர்களும் மிகுந்த மனவேதனையடைந்துள்ளனர். வழக்கமான இடங்களில் இருந்து மாற்றப்பட்டு வேறு இடங்களில் விடப்பட்டதாலும், காப்பகத்தில் இருந்து திடீரென திறந்து விடப்பட்டதாலும் இந்த நாய்கள் உணவின்றி உயிர் பிழைக்குமா என்ற கேள்விக்குறியான சூழல் உருவாகியுள்ளது.
காப்பகத்தில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த நாய்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளன. இதற்கான ஆதாரங்கள் கைவசம் உள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்கு கருத்தடை விதிகளின்படி நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, அவை எங்கு பிடிக்கப்பட்டனவோ அதே இடத்தில் தான் மீண்டும் கொண்டு போய் விடப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கப்பட்ட இடத்தை மறந்துவிட்டு, வேறு வேறு இடங்களில் நாய்களை விட்டுவிடுவதால் அவை இறக்க நேரிடுவதாக ஆணையரிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காப்பக மேனேஜர்களை மாற்றக் கோரிய சில நாட்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. நாய்களை பிடிக்கும் ஊழியர்களுக்கும், காப்பக மேனேஜர் மற்றும் மருத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இனி வேலைக்கு வரமாட்டோம் எனக் கூறிவிட்டு ஊழியர்களே கூண்டுகளை திறந்துவிட்டு சென்றதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வாய் பேச முடியாத அப்பாவி விலங்குகளை பாதிக்கும் இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.