​"திமுக எம்.எல்.ஏ-வால் தமிழகத்திற்கு தலைகுனிவு" – ஸ்ரீரங்கத்தில் அண்ணாமலை அனல் பறக்கும் பரப்புரை!

MsdMsd
Apr 20, 2026 - 13:01
​"திமுக எம்.எல்.ஏ-வால் தமிழகத்திற்கு தலைகுனிவு" – ஸ்ரீரங்கத்தில் அண்ணாமலை அனல் பறக்கும் பரப்புரை!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், திமுக அரசு மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ​

பரப்புரையின் போது பேசிய அண்ணாமலை, "ஆன்மிக பூமியான ஸ்ரீரங்கம் மிகவும் புனிதமானது. கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தகைய பெருமை வாய்ந்த இந்தத் தொகுதி, இன்று திமுக ஆட்சியின் கீழ் நிலைகுலைந்து போயுள்ளது என்றார். 

மேலும் தற்போதைய திமுக எம்.எல்.ஏ, எம்.பழனியாண்டி குறித்துப் பேசிய அவர், அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டார். கரூரில் விதிகளை மீறிச் செயல்பட்ட இவரது கல்குவாரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்காக ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குவாரியில் நடக்கும் முறைகேடுகளைப் படம் பிடிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 

​

குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவர்கள்தான் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அரசியலில் இருக்கும் இத்தகைய களைகளை எடுப்பதற்காகவே இந்தச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ​ஊழல் மற்றும் வன்முறை கலாசாரத்தில் ஈடுபடும் திமுக வேட்பாளரை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், ஸ்ரீரங்கத்தின் புனிதம் காக்கப்படவும், தொகுதியின் வளர்ச்சிக்கும் அதிமுக வேட்பாளர் மனோகரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.