45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான (TOPS) விதிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் வெங்கடேச பாபு மற்றும் சி.ஐ.டி.யு மாநகர செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரையாற்றினர்.
இதில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் வழங்க வேண்டும். 2002-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் MRB செவிலியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றத் தவறினால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.