திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராமங்களில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நிலங்கள் பெரும்பாலானவை விவசாய நிலங்களாக உள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டியில் இருந்து பொன்மலை செல்லும் பிரதான சாலை மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும். பல தசாப்தங்களாக வசித்து வரும் தங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்கப்படாமல், நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, நத்தமாடிப்பட்டி கிராம மக்கள், விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறையின், ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், செயற்பொறியாளரிடம் மனு அளித்து விட்டு களைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.