டாஸ்மாக் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் கூடுதல் பணிச்சுமை - நடவடிக்கை கோரி திருச்சி மண்டல முதுநிலை மேலாளரிடம் தொழிற்சங்கக் கூட்டுக்குழுவினர் மனு!

MsdMsd
May 20, 2026 - 19:40
டாஸ்மாக் பணியாளர்களுக்கு  அச்சுறுத்தல் மற்றும் கூடுதல் பணிச்சுமை - நடவடிக்கை கோரி திருச்சி மண்டல முதுநிலை மேலாளரிடம் தொழிற்சங்கக் கூட்டுக்குழுவினர் மனு!

டாஸ்மாக் கடைகளில் நிலவும் பாதுகாப்பு அற்ற சூழல், காலி பாட்டில் 'பை-பேக்' (Buy-back) திட்ட நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு கூட்டுக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில்:-- ​​

கடந்த ஒரு வார காலமாக டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. டாஸ்மாக் விதிமுறைப்படி இரவு 10 மணிக்குக் கடைகளைப் பூட்டிய பிறகு, அன்றைய கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கக் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால், காவல் துறையினர் இரவு 10 மணி ஆனவுடன் பணியாளர்களை கடையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்துகின்றனர். இதனால் கணக்கு வழக்குகளை முறையாக முடிக்க முடியாமல் பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ​ ​

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் அண்மையில் மூடப்பட்டுள்ளன. அந்தக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இன்னும் மாற்றுப் பணி வழங்கப்படாமல், அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாகப் பிற கடைகளிலோ அல்லது மற்ற அரசுத் துறைகளிலோ மாற்றுப் பணியில் அமர்த்த வேண்டும். ​

​கடந்த ஆறு மாதங்களாக மது பாட்டில்களில் ₹10 ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யும் 'பை-பேக்' திட்டம் அமலில் உள்ளது. காலி பாட்டிலைத் திரும்பத் தரும்போது அந்த ₹10 வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரப்படுகிறது. "ஸ்டிக்கர் ஒட்டுவதற்காகவே கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதனால் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தினசரி வாக்குவாதங்கள் ஏற்பட்டு, பணியாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும். ​​

நிர்வாகம் போதிய ஆட்களை நியமிக்காததால், காலி பாட்டில்களைக் கையாளுவதற்கும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் தனியார் ஆட்களைப் பணியாளர்கள் தங்களது சொந்தச் செலவில் நியமிக்க வேண்டியுள்ளது. ​ஸ்டிக்கர் ஒட்ட மற்றும் பாட்டில்களைச் சேகரிக்க தலா ₹1,000 வீதம் நாளொன்றுக்கு ₹2,000 வரை செலவாகிறது. ​ காலி பாட்டில்களைத் திரும்பப் பெற ஒரு கடைக்குத் தோராயமாக ₹20,000 வரை தேவைப்படுகிறது. இதற்கு கமிஷன் தொகையாக ₹2,000 வரை செலவிட வேண்டியுள்ளது.

சேகரிக்கப்படும் பாட்டில்களை வைக்க குடோன் வாடகையாக நாளொன்றுக்கு ₹750 முதல் ₹1,000 வரை தர வேண்டியுள்ளது. குடோனிலிருந்து சரக்குகளைக் கடைகளுக்குக் கொண்டு வந்து இறக்கப் பெட்டிக்கு ₹7 வீதம் லோடுமேன்களுக்குக் கூலி வழங்கப்படுகிறது. மேலும், பெட்டிகளைப் பிரித்துப் பார்க்கும்போது நாளொன்றுக்கு ₹500 முதல் ₹600 மதிப்பிலான பாட்டில்கள் உடைந்திருப்பது தெரியவருகிறது. ​இதன் காரணமாக, ஒரு கடைக்குத் தினசரி ₹5,000 வரை கூடுதல் செலவாகிறது. இச்சுமையை டாஸ்மாக் நிர்வாகமே ஏற்க வேண்டும். 

​கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாகப் டாஸ்மாக் ஊழியர்கள் மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் (₹11,000 முதல் ₹15,000 வரை) பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, தொகுப்பூதிய முறையை ஒழித்துக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

'பை-பேக்' மற்றும் இதர நடைமுறைச் சிக்கல்களால் பணியாளர்கள் மீது எடுக்கப்படும் எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகளைத் துறைச் சார்ந்த அதிகாரிகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, ஒரு வார காலத்திற்குள் உரிய தீர்வு காண வேண்டும் என்று திருச்சி முதுநிலை மண்டல மேலாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.