திருச்சியில் பூஞ்சான் படர்ந்த இனிப்புகள் விற்பனை - பிஜி நாயுடு ஸ்வீட் கடை மீது நடவடிக்கை எடுக்க வாடிக்கையாளர் கோரிக்கை!

MsdMsd
Nov 10, 2026 - 14:18
Nov 11, 2026 - 14:18
திருச்சியில் பூஞ்சான் படர்ந்த இனிப்புகள் விற்பனை - பிஜி நாயுடு ஸ்வீட் கடை மீது நடவடிக்கை எடுக்க வாடிக்கையாளர் கோரிக்கை!

திருச்சியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கிய கலவை இனிப்புகளில் பூஞ்சான் படர்ந்திருந்ததாகக் கூறி, பிஜி நாயுடு ஸ்வீட் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 7ஆம் தேதி இரவு மேலபுதூரில் உள்ள பிஜி நாயுடு ஸ்வீட் கடையில் 5 கிலோ கலவை இனிப்புகளை வாங்கியுள்ளார். தீபாவளி தினத்தன்று அந்த இனிப்புகளை நண்பர்களுக்கு வழங்கியபோது, ஸ்வீட் பாக்ஸில் இருந்த இனிப்புகளில் பூஞ்சான் படர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த இனிப்புகளை யாருக்கும் வழங்க வேண்டாம் என நண்பர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர், வாங்கிய இனிப்புகள் மற்றும் அதற்கான ரசீதுடன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடை மூடப்பட்டிருந்ததால், பின்னர் மீண்டும் கடைக்கு சென்று நிர்வாகத்திடம் தனது புகாரை தெரிவித்துள்ளார். மேலும், கடை உரிமையாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கடை மேற்பார்வையாளர், விழாக்காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றும், பாதிக்கப்பட்ட இனிப்புகளுக்குப் பதிலாக புதிய இனிப்புகளை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், வாடிக்கையாளரின் புகாருக்கு உரிய விளக்கம் அளிக்காமல் மாற்று இனிப்புகள் வழங்குவதாக கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை போலீசார், வாடிக்கையாளர் மற்றும் கடை நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இனிப்புகள் கெட்டுப்போனது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் புகார் அளிக்குமாறு வாடிக்கையாளரிடம் அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிக்கும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.