மார்ச்.30-க்குள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் - காங்கிரஸ் ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன் பேட்டி!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து கருத்து கேட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்த கருத்து கேட்பு ஆயத்த கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், ஆராய்ச்சி பிரிவு மாநில தலைவர் மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிற்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், ராஜலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நிகழ்விற்கு பிறகு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறுகையில்:--
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களுக்கு புரியும்படி தெளிவாக போஸ்ட் கார்டு அளவில் இருக்கும். அதில் முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றிருக்கும். வரும் 30ஆம் தேதிக்குள் தேர்தல் அறிக்கை தயாராகிவிடும். அதன் பிறகு கார்த்தி சிதம்பரம் எம்பி தேர்தல் அறிக்கையை வெளியிடுவார். இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக வலைதளங்களை 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற இரண்டு பிரதான கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. தொழில்துறையில் தற்போது உள்ள அரசாங்கம் பிஹெச்எல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கொடுக்காமல் அந்த நிறுவனத்தின் தன்மையை குறைத்து வேலைவாய்ப்பை குறைக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் மெத்தன போக்கால் பிஹெச்எல், துப்பாக்கி தொழிற்சாலை சரியாக செயல்படவில்லை. அதற்கு பெரிய நிறுவனங்களை திருச்சியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வரப்பெற்றுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களை திருச்சியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வரப் பெற்றுள்ளது என தெரிவித்தார். இது காங்கிரஸ் தரப்பில் உருவாக்கப்படும் தேர்தல் அறிக்கை. எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவார்கள் என தெரிவித்தார்.
ஈரான் அமெரிக்கா போர் முடியும் வரை தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் நிலவும். கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விலை ஏறி உள்ளது குறித்த கேள்விக்கு?.. அதனை பிரதமர் மோடியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். போருக்கு ஒருநாளுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று நெதன்யாகுவை கட்டிப்பிடித்தார். இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையே நல்லுறவு உண்டு. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவளித்தது ஈரான். ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் எல்பிஜியை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர். அந்த நிறுவனங்களின் எல்பிஜி ஏற்றுமதியை போர் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த 20 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணம் இந்தியாவை விட்டு வெளியில் சென்றுள்ளது. மோடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றார்.