காமராஜர் பிறந்த மண்ணில், கல்வி அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம் - கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி.

MsdMsd
Oct 27, 2026 - 08:05
காமராஜர் பிறந்த மண்ணில்,  கல்வி அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம் - கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணில், கல்வி அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு கல்வியே அடித்தளம். கல்வி நிறுவனங்களின் யூனியனே வழக்குத் தொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திஷா கமிட்டி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசித்தபோது, சுமார் 30 முதல் 40 பள்ளிகளில் கழிப்பறை வசதிகளே இல்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக, மாணவிகள் படிக்கும் பள்ளிகளிலேயே கழிப்பறைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருபுறம் இந்த யதார்த்த நிலை இருக்க, மறுபுறம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது நாம் எத்தகைய சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை யோசிக்க வைக்கிறது.

இது வெறும் தனிநபர் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சிஸ்டம் எவ்வாறு ஊழல் மயமாகியுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். இதை ஒரு சினிமா காட்சி போல கடந்து செல்லாமல், இதன் பின்னணியில் உள்ளவற்றை உற்றுநோக்க வேண்டும்.

இந்த ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பணம் வாங்கப்படாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. மற்ற அமைச்சர்கள் மேல் என்ன புகார் வரப்போகிறது என்பதை யோசிக்க வேண்டும்.

திருச்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாவட்டத்தில், ஏற்கனவே இருந்த ஒரு முன்னாள் அமைச்சர் மீது 1,000 கோடிக்கும் அதிகமான ஊழல் புகார் உள்ளது. தற்போது மற்றொரு அமைச்சர் மீதும் புகார் எழுந்திருப்பது நல்ல அறிகுறி அல்ல. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணையை விரைந்து நடத்த வேண்டும். மத்திய அமலாக்கத்துறை வழக்குகளை இழுத்தடிப்பது போல இல்லாமல், அரசு இந்த விசாரணையை உடனே ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

சினிமா துறையில் புது முயற்சிகளை மேற்கொள்வது போல, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது அவருக்குப் பயன் தராது. தனியாக இயங்கினால் மட்டுமே அவர் சோபிக்க முடியும்.

எஸ்.ஐ.ஆர் குளறுபடி விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது எதிர் கட்சிகளின் கடமை. தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அரசியல் அமைப்பு நிறுவனமாக இயங்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

மோடி, அமித்ஷா அரசு அமைவதற்கு தலைமை தேர்தல் ஆணையர் உதவி புரிந்துள்ளார். தற்போது அவர் தப்பிப்பதற்கு மோடி அரசு உதவுகிறது. நாட்டை காப்பாற்ற வேண்டியது நமது வேலை.

தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போன சம்பவம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஊடக விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சட்டம்-ஒழுங்கைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

திருச்சியில் நிலுவையில் உள்ள மேம்பால பணிகள் தொடர்பாக கோட்ட ரயில்வே மேலாளரிடம் பேசியுள்ளோம். ரயில்வே தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.