திருச்சி ரெயில்வே கோட்ட இயந்திர பொறியாளரை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்; பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக குற்றச்சாட்டு!

MsdMsd
May 29, 2026 - 13:23
May 29, 2026 - 13:24
திருச்சி ரெயில்வே கோட்ட இயந்திர பொறியாளரை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்;  பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக குற்றச்சாட்டு!

ரயில்களில் பிரேக், வீல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் சரியாக இயங்குகிறதா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கண்காணித்து சரிபார்க்கும் பணிகளை சி அண்ட் டபிள்யூ (C&W) பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு திருச்சி கோட்ட முதுநிலை இயந்திர பொறியாளர் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை. இயந்திர பொறியாளரின் இந்த சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தும், பராமரிப்பு தொழிலாளர்களுக்கு உடனடியாக உரிய உபகரணங்களை வழங்க வலியுறுத்தியும், திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள முதுநிலை கோட்ட இயந்திர பொறியாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்ஆர்எம்யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு, முதுநிலை கோட்ட இயந்திர பொறியாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் துணை பொது செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-- ​

திருச்சி கோட்டத்தில் மிக முக்கியமான கேந்திரமான பகுதியாக சி&டபிள்யூ துறை இயங்கி வருகிறது. ரயிலின் கீழ் பகுதி வேலைகள், பிரேக் மற்றும் வீல் பரிசோதனை போன்ற பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் அத்தனை பணிகளையும் இவர்கள்தான் பார்க்கிறார்கள். ​இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துறையில், முதுநிலை கோட்ட இயந்திர பொறியாளர் நிர்வாகத்தால் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு தினமும் சுமார் 172 ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களை பராமரிக்கும் முக்கிய பொறுப்புகளை தொழிற்சங்கத்திடம் ஆலோசிக்காமல், நிர்வாகம் தன்னிச்சையாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. அவ்வாறு ஒப்பந்தம் எடுக்கப்பட்ட நிறுவனங்கள், 23 பெட்டிகளை பராமரிக்க வெறும் 2 நபர்களை மட்டுமே பணியமர்த்துகின்றன. இதனால் ஏற்படும் குறைபாடுகளுக்கு நிரந்தர தொழிலாளர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. ​

போதிய உபகரணங்கள் தராததால் தொழிலாளர்கள் விதிமுறைப்படி மட்டுமே வேலை (Work to Rule) என்ற போராட்டத்தை இன்று கையில் எடுத்தனர். எனினும், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால் ரயில்கள் அனைத்தும் முறையாக சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.எம்.யூ (SRMU) தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோர் தலையிட்டு, உயர்மட்ட அதிகாரிகளுடன் (PCME) பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, ஆட்குறைப்பு மற்றும் பணியிடங்களை ஒன்றிணைக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட்டுள்ளதாகவும், தேவையான ஆட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.