திருச்சியில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் - பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டறிக்கைகள் வழங்கி விழிப்புணர்வு!

MsdMsd
Oct 28, 2026 - 22:01
திருச்சியில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் -  பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டறிக்கைகள் வழங்கி விழிப்புணர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தீ விபத்தில்லாமல் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாட வலியுறுத்தி, திருச்சியில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வாகன விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட விபத்து தடுப்பு சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத் ஏற்பாட்டில், “தீ விபத்தில்லா தீபாவளி” என்ற நோக்கில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் திருச்சி முதல் கங்கை கொண்டான் வரையிலான விழிப்புணர்வு வாகன பிரச்சார தொடக்க விழா, திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் மற்றும் பொதுநல சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத் ஆகியோர் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. 

இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் மூலம், பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பது, குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பது, அருகில் தண்ணீர் மற்றும் மணல் போன்றவற்றைத் தயாராக வைத்திருப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து விலகி இருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. 

மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்; எரிந்து முடிந்த பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்க முயற்சிக்கக் கூடாது; பட்டாசுகளைப் பாக்கெட்டுகளில் வைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் விலங்குகள் வசிக்கும் பகுதிகளில் ஒலி மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தேசிய விருதாளர், திரைப்பட நடிகர் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆர்.ஏ. தாமஸ், சாய் பாலாஜி, ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத் தலைவர் மோகன்ராம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் சரவணன், தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநர் சார்ஜென்ட் பாலசுப்பிரமணியன், மகேஸ்வரன், பழனியப்பன், சிவராமன், முத்துப்பாண்டி, பாலமுருகன், நாகூர் பிச்சை, சந்திரசேகர், ராஜேஷ், சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.