திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம், தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களுக்கு இன்று மதியம் வந்த ஒரு மின்னஞ்சலில், இந்த அலுவலகங்களில் ‘ஆர்டிஎக்ஸ்’ (RDX) வெடிகுண்டுகள் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாநகர காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், இரு வளாகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் வேலுச்சாமி, உதவி ஆய்வாளர்கள் அருளானந்தம், ரமேஷ் மற்றும் அன்பழகன் ஆகியோர் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. அதிநவீன வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் தபால் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளும் அங்குலம் அங்குலமாகச் சோதிக்கப்பட்டன. நீண்ட நேரம் நடைபெற்ற இந்தத் தீவிர சோதனையின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவித வெடிப்பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதன் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபர் யார், பின்னணி என்ன என்பது குறித்து திருச்சி மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.