ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி? - திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது வழக்குப்பதிவு – சொத்தை முடக்க அறநிலையத்துறை நடவடிக்கை!

MsdMsd
Sep 19, 2026 - 20:30
ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி? - திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது வழக்குப்பதிவு – சொத்தை முடக்க அறநிலையத்துறை நடவடிக்கை!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது திருச்சி மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோயிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் மற்றும் நிலங்கள் உள்ளன. அந்த வகையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகே கட்டிடத்துடன் அமைந்துள்ள, சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் கோயில் நிலம் தொடர்பாக இந்தப் புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்த நிலம் ராம்குமார் பெயருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அந்த இடத்தில் தற்போது வரை திமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் மனைவி அப்பகுதியில் வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வருவதாகவும், அவர் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமானவர் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலம் தொடர்பான இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்தப் புகாரின் அடிப்படையில் ராம்குமார் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது அல்லது அதுதொடர்பாக மறுபதிவு செய்வதை தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சார்பில் ஸ்ரீரங்கம் சார் பதிவாளருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்து. இதன் மூலம் சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான பதிவுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் சிலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என திருச்சி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, போலி ஆவணங்கள் தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் நபர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது.