திருச்சியில் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்; உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த இலக்கு!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், 'வீ த லீடர்ஸ்' (We the Leaders) இயக்கத்தின் நிறுவனருமான அண்ணாமலை வழிகாட்டுதலின்படி, திருச்சி மாநகரில் இந்த இயக்கத்தின் தன்னார்வலர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உறையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கி, ஒளிமயமான எதிர்காலத்தை அமைப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரபாகரன், சுரேஷ், காசி மகேஸ்வரன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், முன்னாள் பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களை 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.
இது குறித்து தன்னார்வலர் காசி மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். அண்ணாமலை அறிவிக்கவுள்ள அரசியல் பயிற்சிப் பட்டறைகள் மூலம், இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகள் தெளிவுபடுத்தப்படும். தற்போது தலைவர் அறிவுறுத்தியபடி உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "திமுக, அதிமுக உள்ளிட்ட பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பலர், அண்ணாமலையின் மீதான ஈர்ப்பால் அரசியலுக்கு வந்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இனி தமிழக அரசியல் அண்ணாமலையைச் சுற்றியே அமையும்; அவரே மாற்றத்திற்கான சக்தியாக உருவெடுத்துள்ளார். விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதை விட, ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம்," என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற மற்ற தன்னார்வலர்கள் பேசுகையில், "கார்திகை தீபம் போல தமிழகத்திற்கு ஒளி ஏற்றி வைக்க அண்ணாமலை வந்துள்ளார். தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை அவரது புகழ் பரவியுள்ளது. தேசிய சிந்தனை கொண்ட, சமூக நீதி பேசும் ஒரு தலைவராக அண்ணாமலையை மக்கள் பார்க்கிறார்கள். தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக அவர் உருவெடுப்பார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது," என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினர்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், வரும் நாட்களில் அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.