திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ் எடுத்த வடமாநில தொழிலாளி மீது நடவடிக்கை!

MsdMsd
Jun 20, 2026 - 12:01
திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ் எடுத்த வடமாநில தொழிலாளி மீது நடவடிக்கை!

திருச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் காஜாமலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தற்போது பொதுப்பணித் துறை மூலம் கட்டிட பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர், ஆட்சியரின் முகாம் அலுவலக அறைக்குள் சென்று, அங்கு அமர்ந்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.